முடிவை கவர்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அமைச்சர் ஷாஜகான் வலியுறுத்தல்

மில்களை மூடும் விவகாரம் தொடர்பாக கவர்னர் தனது முடிவை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து புதுச்சேரி அரசு வருவாய்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-01-22 23:15 GMT
புதுச்சேரி, 

தொழில்வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலனுக்கு எங்களது அரசு அரும்பாடுபட்டு வருகிறது. ஏ.எப்.டி மற்றும் சுதேசி-பாரதி மில் தொழிலாளர்களில் கேட்பவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து மீதம் உள்ள தொழிலாளர்களை கொண்டு மில்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அமைச்சரவையில் முடிவு எடுத்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த 2019-ம் ஆண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட பல முடிவுகளில் மில்களை தொடர்ந்து நடத்த விருப்ப ஓய்வு கேட்பவர்களுக்கு மட்டும் கொடுக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஒரு கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மாறாக அவர் 2 மில்களையும் மூட வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்து நாங்கள் அனுப்பிய கோப்பினை திருப்பி அனுப்பினார். கவர்னருக்கும், அமைச்சரவையில் எடுக்கும் முடிவுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்ததால் அது மத்திய அரசின் முடிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கோப்பு இன்னும் மத்திய அரசின் பரிசீலனையில் தான் உள்ளது. இதற்கிடையே இந்த மில் ஊழியர்களுக்கு லே-ஆப், மாதாந்திர சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்க பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டு அது சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

இரு மில்கள் தொடர்பான கோப்பு தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் போது கவர்னர் தன்னிச்சையாக எடுத்த முடிவு ஒரு ஆரோக்கிய சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசு இந்த இரு மில்களையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே கவர்னர் தனது தன்னிச்சையான முடிவை மறுபரிசீலனை செய்து ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் வழங்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு கோப்பை தயாரித்து அதை முதல்-அமைச்சர் மூலமாக கவர்னருக்கு அனுப்பி உள்ளேன். எனவே மில் தொழிலாளர்கள் எங்கள் அரசின் நிலைப்பாட்டை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்