தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இலத்தூருக்கு தற்காலிகமாக இடமாற்றம்

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நேற்று முதல் இலத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட தொடங்கியது.

Update: 2020-01-22 22:30 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தை 2 ஆக பிரித்து, தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்துக்கான புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை மேலகரம் நகர பஞ்சாயத்து பகுதியிலுள்ள ஆயிரப்பேரியில் அமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

அங்கு புதிய அலுவலக கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிக இடங்களில் இந்த அலுவலகங்கள் இயங்கும் எனவும் கலெக்டர் தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்த நிலையில் தென்காசி அருகிலுள்ள இலத்தூரில் வாடகைக்கு அரசு உதவிபெறும் பள்ளியான ஸ்ரீராம் வித்யாலயா பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட அரசின் அனுமதி கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இலத்தூரில் உள்ள அந்த பள்ளி கட்டிடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. நேற்று முதல் அந்த பள்ளி கட்டிடத்தில் புதிய சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட தொடங்கியது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கூறுகையில்,‘மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடு்க்க வரும் பொதுமக்கள் மனு கொடுக்க வசதியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தற்காலிகமாக தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது.

அங்கு பொதுமக்களிடம் நான்(போலீஸ் சூப்பிரண்டு) மனுக்களை வாங்கி வந்தேன். தற்போது மனு கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதற்கிடையில் இலத்தூரில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்தில் தற்காலிகமாக புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து அந்த பள்ளிக்கூட கட்டிடத்தில் இன்று(நேற்று) முதல் தற்காலிகமாக சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இனிமேல் இங்கு வந்து மனு கொடுக்கலாம்’ என்றார்.

மேலும் செய்திகள்