பாதுகாப்பு படைக்கு என்ஜின்கள் தயாரிக்க ரூ.148 கோடியில் புதிய எந்திரம் - நாட்டுக்கு அர்ப்பணிப்பு
ஆவடியில் உள்ள என்ஜின் தொழிற்சாலையில் பாதுகாப்பு படைக்கு தேவையான என்ஜின்களை தயாரிக்க ரூ.148 கோடியே 40 லட்சத்தில் புதிய இணக்க உற்பத்திப் பிரிவு எந்திரம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
ஆவடி,
நமது நாட்டில் பிரதான போர்ப்படை கலங்களுக்கு தேவையான என்ஜின்கள் ஆவடியில் உள்ள என்ஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 350 என்ஜின்கள் உருவாக்கப்படுகின்றன.இந்த நிலையில் பாதுகாப்பு படைக்கு என்ஜின்களின் தேவை அதிகரித்து வந்துள்ளது. இதனால் ஆவடியில் ஆண்டுக்கு 750 என்ஜின்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து ரூ.148 கோடியே 40 லட்சம் செலவில் புதிய இணக்க உற்பத்திப் பிரிவு (எப்.எம்.எஸ்.) எந்திரம் இறக்குமதி செய்யப்பட்டது.
இதனை, இந்திய படைக்கல தொழிலக சேவை தலைவர் ஹரி மோகன் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் வாயிலாக ஆவடியில் உள்ள என்ஜின் தொழிற்சாலையில் எப்.எம்.எஸ். எந்திரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு படைக்கு தேவையான என்ஜின்களை விரைவாக உருவாக்க முடியும்.
இதனால் ஆண்டுக்கு 750 என்ஜின்களை உருவாக்கி இலக்கை அடைய முடியும் என ஆவடி என்ஜின் தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.