ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கில் 12 மாநில வீரர்கள் பங்கேற்கும் வளையபந்து போட்டி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
ஜோலார்பேட்டையில் 12 மாநில அணிகள் பங்கேற்ற வளையபந்து போட்டிகளை 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 65-வது தேசிய அளவிலான வளையபந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், மராட்டியம், புதுச்சேரி, சத்தீஷ்கர், குஜராத், லட்சத்தீவு, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. தொடக்க விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ் வரவேற்றார். இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் பாயல் கோலி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக பள்ளி மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 12 மாநில அணிகளின் பயிற்சியாளர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த விளையாட்டு மைதானம் ஒரு கால கட்டத்தில் ஆக்கிரமிப்புகளால் இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு அதன்பின் இந்த இடம் சிறிய மைதானமாக உருவாக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசுக்கு எடுத்துக்காட்டு என்றார்.
போட்டிகள் வருகின்ற 25-ந்் தேதி வரை 4 நாட்கள் காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரையும் மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடக்கிறது.
விழாவில் திருப்பத்தூர் மாவட்ட கல்வி பள்ளி துணை ஆய்வாளர் தாமோதரன், ஜோலார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஐ.ஆஜம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ், நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை நன்றி கூறினார்.