கோவில்பட்டி யூனியன் தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் - 30-ந் தேதி நடக்கிறது
தேர்தல் அலுவலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் நிறுத்தப்பட்ட கோவில்பட்டி யூனியன் தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
கோவில்பட்டி,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் உள்ள மொத்தம் 19 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தலா ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து கடந்த 11-ந் தேதி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தி.மு.க. கூட்டணி சார்பில் 11 யூனியன் கவுன்சிலர்களும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 9 யூனியன் கவுன்சிலர்களும் யூனியன் அலுவலகத்துக்கு வந்தனர்.
இதற்கிடையே கோவில்பட்டி யூனியன் தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயசீலனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து யூனியன் தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அன்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு யூனியன் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலும், மதியம் 3 மணிக்கு யூனியன் துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலும் நடைபெறுகிறது. இதில் யூனியன் கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள். கோவில்பட்டி யூனியன் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட துணை இயக்குனர் (ஊராட்சி) உமாசங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம் செய்து வருகிறார்.