விவசாயி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை- பணம் திருட்டு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மயிலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.9½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-21 23:00 GMT
மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(வயது 60), விவசாயி. இவருக்கு சிவகாமி(55) என்ற மனைவியும், மணிகண்டன்(27), மகேஷ்(25) ஆகிய 2 மகன்களும், ராஜேஸ்வரி(23) என்ற ஒரு மகளும் உள்ளனர். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த பவுஞ்சூர் என்ற கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மகேஷ் கூவத்தூரில் தங்கி, செல்போன் கடை நடத்தி வருகிறார். மணிகண்டனுக்கு திருமணமாகி தனது மனைவி சுகுணாவுடன் தென்களவாயில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வெங்கடாஜலபதி வீட்டின் பின்பக்க கதவை பூட்டாமல் குடும்பத்தினருடன் தூங்கினார். நேற்று அதிகாலை வெங்கடாஜலபதியும், சிவகாமியும் எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ கதவு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 25½ பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடாஜலபதி, இதுபற்றி மயிலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெங்கடாஜலபதி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.9½ மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதனிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த போலீஸ் மோப்பநாய் ராக்கி, திருட்டு நடந்த வீட்டில் இருந்து, மோப்பம் பிடித்தபடி அங்குள்ள பஸ் நிறுத்தம் வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்