10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும் கலெக்டர் ரத்னா பேச்சு

அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா கூறினார்.;

Update: 2020-01-21 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிக்காட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிக்காட்டி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அளவில் நமது அரியலூர் மாவட்டம் நடந்து முடிந்த மார்ச் 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.71 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 11-வது இடத்தை பெற்றது. இதில் 10 ஆயிரத்து 454 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி, 10 ஆயிரத்து 110 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி பெற்று...

மேலும், இந்த கல்வியாண்டில் வருகிற மார்ச் 2020 நமது மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 10 ஆயிரத்து 527 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 8 ஆயிரத்து 495 மாணவ- மாணவிகள் கலந்துகொள்கின்றனர். எனவே 10-ம் வகுப்பு மாணவர்கள் வருகிற மார்ச் 2020 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காமராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் அம்பிகாபதி (அரியலூர்), சுந்தர்ராஜ் (செந்துறை), பாலசுப்பிரமணியன் (உடையார்பாளையம்), முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (உயர்நிலை) குணசேகரன், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்