சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா
காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியில் பழங்குடி இன மக்களாக உள்ள தொட்டிய நாயக்கர் இனத்தவர்கள் சுமார் 500 குடியிருப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. பள்ளி, எஸ்.எம்.எஸ்.வி. மேல் நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, மகரிஷி மெட்ரிக் பள்ளி, மீனாட்சி பெண்கள் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீண்ட காலமாக சாதி சான்றிதழ் வழங்கவில்லையாம்.
இதையடுத்து இவர்களுக்கு வழங்க உள்ள அரசின் சலுகைகள் ஏதும் கிடைக்காமல் தவிப்பதாக கூறி பள்ளிகளுக்கு செல்லாமல் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து விட்டு அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீசார் அங்கு வந்து அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய்த்துறை சார்பில் காரைக்குடி தாசில்தார் பாலாஜி அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- எங்களது பூர்விகம் ஆந்திரா மாநிலம். நாங்கள் இங்கு வந்து சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எங்கள் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து நாங்கள் பல்வேறு கட்டங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இதுகுறித்து எங்கள் பகுதி மக்கள் ஏற்கனவே சிவகங்கை கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட கலெக்டரிடம் எங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவும் கொடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இதையடுத்து தற்போது எங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடி மக்களுக்கு அரசு வழங்கும் எந்தவித சலுகைகளையும் பெற முடியவில்லை.
தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று கூறி இங்குள்ள இந்த மாரியம்மன் கோவில் வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து எங்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.