லோக்பால் அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு அக்கறை இல்லை முன்னாள் எம்.பி. ராமதாஸ் புகார்

லோக்பால் அமைப்பை ஏற்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2020-01-19 22:30 GMT
புதுச்சேரி, 

லோக்பால் அமைப்பை ஏற்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அக்கறை இல்லை

புதுச்சேரி அரசின் நிர்வாகத்தை பற்றி சமீப காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசின் சாதாரண சேவைகளை பெறுவதற்கு கூட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசு இருந்தால்தான் சில துறைகளில் மக்களின் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படுகின்றன. இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆளும் கட்சிக்காரர்களை தவிர எதிர்க்கட்சியினருக்கு அரசின் சேவைகள் கிடைப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகிறது. புதுவை மாநிலத்தில் மக்கள் குறை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தபோதும் மக்கள் குறைகள் தீர்ந்தபாடில்லை. லோக்பால் அமைப்பை ஏற்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை. குழந்தைகள் கல்வி பெறும் உரிமை சட்டத்தை முழுமையாக செயல்படுத்தாததால் ஏழை எளிய மாணவர்கள் தரமான கல்வி சேவையை பெற முடியவில்லை.

உரிமை சட்டம்

இந்த குறைகள் களையப்பட்டு அரசு உடனடியாக அரசின் பொதுப்பணிகள் பெறும் உரிமை சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த சட்டம் இயற்றப்படுமானால் முதலில் எந்தெந்த துறைகள் எந்தெந்த சேவைகளை அளிக்கும் என்பதை வரையறுக்க வேண்டும். அதிகாரிகள் யார் என்பதையும், எத்தனை நாட்களுக்குள் இந்த சேவையை அளிக்க வேண்டும் என்பதையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

ஒரு சேவை தனக்கு தேவை என்று மனு அளித்தால் 30 நாட்களுக்குள் அந்த சேவையை அளிக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் அளிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை குறிப்பிட்ட அதிகாரி மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த நபர் அதிகாரியிடம் இருந்து நஷ்டஈடு கேட்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம். இந்த சட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதற்கு தனியாக பொது சேவைகள் மேலாண்மை துறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். இந்த துறைக்கு தேவையான தொழில்நுட்பத்தை அரசு உருவாக்கித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்