செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் ஜான் லூயிஸ் தொடங்கி வைத்தார்.;
செங்கல்பட்டு,
போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த முகாமுக்கு டீன் பாலாஜி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,675 மையங்களில் 2 லட்சத்து 67,158 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த முகாமில் பொது சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர்கள் என மொத்தம் 5,456 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு 54 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.