விடுமுறை முடிந்து ஊருக்கு செல்வதற்கு தேனி பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் நேற்று திரும்பி சென்றனர். இதனால் தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.;
தேனி
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் புதன்கிழமை முதல் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்காரணமாக வெளியூர்களில் பணிபுரிந்தவர்கள் தங்களது சொந்த ஊரான தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் 5 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்வதற்காக நேற்று தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
தேனியில் இருந்து மதுரை, திருச்சி, திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், பஸ்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.
அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் பஸ்சில் இருக்கை இன்றி, நின்று கொண்டே பயணம் செய்தனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பயணிகளிடம் கேட்டபோது, ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊரான தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பி செல்வதற்கு தேனி புதிய பஸ்நிலையத்தில் பஸ் ஏறுவதற்கு முடியவில்லை. அந்த அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பஸ்சில் பயணிகள் ஏறமுடியாமல் குழந்தைகளுடன் தவிக்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பஸ் நிலையத்தில் பயணிகளை வரிசைப்படுத்தி பஸ்களில் ஏறுவதற்கு போலீசார் ஒழுங்குபடுத்தவேண்டும் என்றனர்.