போலியோ சொட்டு மருந்து முகாம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுவையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி,
புதுவையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
போலியோ சொட்டு மருந்து
போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குளவிநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுடு ஏரி, சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி புதுவை எல்லைப்பகுதிகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோவில், திருக்கனூர், குரும்பாபேட் ஆகிய இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதுவை முழுவதும் 333 முகாம்களும், காரைக்காலில் 79-ம், மாகியில் 18, ஏனாமில் 22 என முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நாராயணசாமி
புதுவை குயவர்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, 100 சதவீதம் போலியோ இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவோம் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஒதியஞ்சாலை சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கினார். ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. முகாமை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவ முதன்மை அதிகாரி டாக்டர் நாராயணன், துணை மருத்துவ அதிகாரி டாக்டர் வைத்தீஸ்வரி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை கோபிகா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
எல்லைப்பகுதி
தொடர்ந்து ஒவ்வொரு முகாமிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்தினை வழங்கினார்கள். புதுவை எல்லைப்பகுதியில் வெளியிலிருந்து வரும் கார், பஸ், மோட்டார்சைக்கிள்களை மறித்து அவற்றில் இருந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார்கள்.
அதேபோல் புதுவை வந்த சுற்றுலா பயணிகளின் குழந்தைகளுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார்கள். விடுபட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று(திங்கட்கிழமை)வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.