தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-01-19 22:30 GMT
பாகூர், 

பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் மணமேடு பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் நேற்று ஆற்றுத்திருவிழா நடந்தது. விழாவையொட்டி பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை, குடியிருப்புபாளையம், அரங்கனூர், கரைமேடு, சேலியமேடு, டி.என் பாளையம் உள்பட 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து கோவில் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டர்கள், மாட்டுவண்டிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு தீர்த்தவாரி நடந்தது.

இந்த விழாவில் பாகூர், சோரியாங்குப்பம், மற்றும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஏராளமான அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஆற்றங்கரை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், இலவச மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

மணமேடு

இதேபோல் மணமேடு ஆற்றங்கரையிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மணமேடு, எம்.பி. அகரம், களிஞ்சிகுப்பம், வீராணம், கீழ்பாதி, பனையடிக்குப்பம், நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்