அமித்ஷாவின் மவுனமே மந்திரிசபை விரிவாக்கத்திற்கு தாமதம் மந்திரி ஈசுவரப்பா சொல்கிறார்
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மவுனமே மந்திரிசபை விரிவாக்கத்திற்கு தாமதம் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
மைசூரு,
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மவுனமே மந்திரிசபை விரிவாக்கத்திற்கு தாமதம் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
மந்திரி ஈசுவரப்பா
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மந்திரியுமான ஈசுவரப்பா நேற்று மைசூருவுக்கு கார் மூலம் வந்தார். மைசூரு சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அவர் தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்தவர்களால்தான் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அதனால் அவர் களுக்கான நன்றிக்கடனை தீர்க்க வேண்டி உள்ளது.
அமித்ஷாவின் மவுனம்
மந்திரி சபையை விரிவுபடுத்த வேண்டி இருந்தது. பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இது சம்பந்தமாக எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதால் கொஞ்சம் தாமதமாகி உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா வெளிநாட்டுக்கு சென்றுவர உள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் மந்திரிசபை விரிவுபடுத்தப்படும்.
மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்தெழுந்த மக்கள் கூட்டணி ஆட்சியை விரட்டியடித்தனர்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.