கலசா-பண்டூரி திட்டம் குறித்து அமித்ஷா வாய் திறக்காதது ஏன்? மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
கலசா-பண்டூரி திட்டம் குறித்து அமித்ஷா வாய் திறக்காதது ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
கலசா-பண்டூரி திட்டம் குறித்து அமித்ஷா வாய் திறக்காதது ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வாய் திறக்கவில்லை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உப்பள்ளிக்கு வந்து, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிவிட்டு சென்றுள்ளார். அவர் கலசா-பண்டூரி திட்டம் குறித்து வாய் திறக்காதது ஏன்?. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் பேசவில்லை. இந்த திட்டத்தால் உப்பள்ளி உள்பட வட கர்நாடக பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள். ஆனால் அதுபற்றி அமித்ஷா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மட்டும் அவர் பேசியுள்ளார். அமித்ஷாவுக்கு தனது கட்சியின் வாக்கு வங்கியை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம். கர்நாடக விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை விட குடியுரிமை திருத்த சட்டமே அவருக்கு முக்கியம்.
புதிய தலைவர் நியமனம்
இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை தலித் விரோதிகள் தான் எதிர்க்கிறார்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார். தலித்துகளின் நலனில் பா.ஜனதா தலைவர்களுக்கு அக்கறை இல்லை. உணர்வுப்பூர்வமாக மக்களை தூண்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அமித்ஷா இவ்வாறு பேசியுள்ளார்.
தலித் மக்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். தலித்துகள் மீது கொஞ்சமாவது அக்கறை செலுத்தும் மாண்பு பா.ஜனதாவின் கொள்கையில் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் அந்த மக்கள் அநீதிக்கு உள்ளாவது குறைந்திருக்கும். கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவர் நியமனம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கட்சி மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
ஜோதிடர் அல்ல
புதிய தலைவர் நியமனம் எப்போது நடைபெறும் என்று என்னால் கூற முடியாது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூற நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளை பிரிக்கும் விஷயம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.