மும்பையில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறந்து இருக்க அனுமதி மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவிப்பு
மும்பையில் குடியரசு தினம் முதல் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படுவதாக மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவித்து உள்ளார்.
மும்பை,
பரபரப்பான மும்பை நகரத்தில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் பகல், இரவு என 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
ஆதித்ய தாக்கரே
சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதை வலியுறுத்தி வந்தார். பாரதீய ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்தபோது, அவருக்கு கடிதம் எழுதியும் வலியுறுத்தினார்.
மராட்டியத்தில் தற்போது தனது தந்தை உத்தவ் தாக்கரே தலைமையில் அமைந்து உள்ள கூட்டணி அரசில் ஆதித்ய தாக்கரே சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார்.
26-ந் தேதி முதல்
இந்த நிலையில், மும்பையில் குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி முதல் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் என ஆதித்ய தாக்கரே அறிவித்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
லண்டன், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரங்கள் இரவு வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றன. அந்த நகரங்களில் இரவு, பகல் என நாள் முழுவதும் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் திறந்து இருக்கின்றன. லண்டனின் இரவு நேர பொருளாதாரம் 5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடையது.
இந்தூர் சபாரா மார்க்கெட் இரவு முழுவதும் செயல்படுகிறது. ஆமதாபாத் நகரமும் தனது கொள்கையில் சில மாற்றங்களை செய்து உள்ளது.
கட்டாயம் இல்லை
மும்பை பெருநகரம் 24 மணி நேரமும் இயங்கி கொண்டு இருக்கிறது. எனவே இதுபோன்ற வசதிகளை வழங்குவதில் மும்பை பின்தங்கி இருக்க கூடாது. ஆன்லைன் விற்பனை மையங்கள் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் போது, கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஏன் மூடப்பட வேண்டும். இரவு வாழ்க்கையை மது குடிப்பதோடு மட்டுமே தொடர்புபடுத்துவது தவறு.
மும்பையில் வருகிற 26-ந் தேதி முதல் குடியிருப்பு அல்லாத பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் செயல்படலாம். இருப்பினும் இது கட்டாயம் இல்லை. உரிமையாளர்கள் விருப்பத்தை பொறுத்தது. இரவு முழுவதும் கடைகள் திறப்பு திட்டத்துக்காக கலால் துறை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.