மாமல்லபுரம் அருகே, கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் சாவு
மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் (வயது 28), வேல்முருகன் (29). இவர்கள் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மாமல்லபுரத்திற்கு சிற்ப வேலைக்கு வந்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் சென்றபோது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்து தூக்கி வீசப்பட்ட இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக இறந்தார். மேல்சிகிச்சைக்காக மோகன்ராஜ் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.