மீனாட்சிபுரத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி - தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மீனாட்சிபுரத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது. இதனால் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நபார்டு திட்டத்தில் சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் மீனாட்சிபுரத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம், துணைத்தலைவர் யாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. உதயகுமார், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, அ.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.விடம் மீனாட்சிபுரம் பகுதி மக்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், மீனாட்சிபுரத்தில் உள்ள மயான கட்டிடம் சேதமடைந்து பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.