குண்டர் தடுப்பு சட்டத்தில் சேலிய மேடு ரவுடி கைது
சேலியமேட்டை சேர்ந்த ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாகூர்,
சேலியமேட்டை சேர்ந்த ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரவுடி கைது
பாகூரை அடுத்துள்ள சேலியமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது26) இவர் மீது அடி தடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி, பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் வீரப்பன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
கொலை முயற்சி வழக்கில், சிறையில் இருந்த பிரபாகரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அவரால் பாகூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் இருந்து வருவதால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் கோப்புகளை தயார் செய்ய பாகூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அதற்கான கோப்புகளை தயார் செய்து, புதுச்சேரி கலெக்டர் அருணிடம் சமர்ப்பித்தனர். இதனை ஆய்வு செய்த கலெக்டர் அருண், குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி பிரபாகரனை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பாகூர் போலீசார் பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.