தம்பி கண் எதிரே பரிதாபம்: கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
பவானிசாகர் அருகே தம்பி கண் எதிரே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பவானிசாகர்,
பவானி அருகே உள்ள ஜம்பை சின்னமோளபாளையத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் கார்த்தி (வயது 27). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கார்த்தி, அவருடைய தம்பி ரமேஷ் மற்றும் நண்பர் கவுதம் ஆகிய 3 பேரும் காரில் பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அணையை சுற்றி பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு காரில் திரும்பி உள்ளனர். செல்லும் வழியில் பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி 3 பேரும் குளித்தனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.
இதனால் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு கார்த்தி சென்றுவிட்டார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கியதுடன், வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார்.
இதை கண்டதும் ரமேஷ் மற்றும் கவுதம் ஆகியோர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.