ஈரோடு ஜல்லிக்கட்டு விழா: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள் - மாடுகள் முட்டியதில் 5 பேர் காயம்

ஈரோடு ஜல்லிக்கட்டு விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினார்கள். இதில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-01-18 22:45 GMT
ஈரோடு, 

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 2-வது ஆண்டாக நேற்று ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது. ஈரோடு பெருந்துறைரோடு பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் விழா நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். எம்.எல்.ஏ.கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கோவில் மாடு, சாமி மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பூஜையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஆர்.டி.ஓ. முருகேசன், துணை கலெக்டர் (பயிற்சி) சிந்துஜா, ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

மைதானத்துக்குள் மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சி.கதிரவன் உறுதிமொழி வாசிக்க வீரர்கள் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முதலில் கோவில் மாடு, சாமி மாடுகள் வாடி வாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டன. அந்த மாடுகளை வீரர்கள் தொட்டு வணங்கினார்கள். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வாடி வாசலில் இருந்து மாடுகள் மைதானத்துக்குள் அவிழ்க்கப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போராடினார்கள். துள்ளி ஓடும் காளைகளை விரட்டிப்பிடிக்க வீரர்கள் துரத்தினார்கள். ஒரு சில மாடுகள் மட்டுமே வீரர்களின் பிடிக்கு சிக்கின.

முதல் சுற்றில் 70 மாடுகள் விடப்பட்டன. இதில் 7 வீரர்கள் மட்டுமே மாடுகள் பிடித்து பரிசுகள் வென்றனர். பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

2-ம் சுற்றில் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. போட்டியில் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை கொண்டு வந்திருந்தனர்.

வாடிவாசலில் இருந்து வெளியேறிய மாடுகள் எதிர்வாடி வழியாக வெளியேற்றப்பட்டன. சில மாடுகள் எதிர்பாராத விதமாக எதிர்வாடியில் இருந்து திரும்பவும் மைதானத்துக்குள் புகுந்து வீரர்களை விரட்டிச்சென்றது.

4 சுற்றுகளாக வீரர்கள் மைதானத்துக்குள் இறக்கப்பட்டனர். மொத்தம் 328 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் 6 மாடுகள் மருத்துவ பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. 322 மாடுகள் மைதானத்தில் இறக்கப்பட்டன. 250 வீரர்கள் பங்கேற்று போட்டியில் விளையாடினர்.

வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கு கன்றுக்குட்டிகள், செல்போன், கிரைண்டர், தங்கக்காசு, வெள்ளிக்காசு, அண்டா, பரிசுப்பெட்டி, பணப்பரிசு என பல பொருட்கள் பரிசாக அறிவிக்கப்பட்டன. மாடுகள் பிடிபட்டால் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் டாக்டர் ரகுநாத், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வீரக்குமார், ஜெகதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், கே.எஸ்.பழனிச்சாமி, சக்தி மசாலா நிர்வாக இயக்குனர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், ஏ.ஈ.டி. பள்ளிக்கூட தாளாளர் காசியண்ணன், நந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வி.சண்முகன், சுதா ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் கந்தசாமி, அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி, ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ்குமார், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார், தாசில்தார் ரவிச்சந்திரன், கொ.ம.தே.க. இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் இருந்து வெளிவந்த மாடுகள் வெளியேறி மைதானத்தை விட்டு வெளியே சென்ற பிறகு உரிமையாளர்கள் அவற்றை பிடிக்க தாமதமானதால், வாடிவாசல் திறப்பது அவ்வப்போது தாமதமானது. அதுமட்டுமின்றி மாடுகளை உரிமையாளர்கள் பிடிக்க முடியாத அளவுக்கு சுற்றிக்கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்துக்குள் வெளியே நடந்த ஜல்லிக்கட்டு போன்றே இது இருந்தது.

போட்டியில் 5 வீரர்கள் எதிர்பாராமல் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்கார்த்திக்குமார், சார்லஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், ராஜூ மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். போட்டியின் நடுவராகவும், அறிவிப்பாளராகவும் சரவணன் செயல்பட்டார். அவர் கலகலப்பாக பேசி வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார். போட்டிகள் பிற்பகல் 2.30 மணிக்கு நிறைவடைந்தது.

விழாவில் ‘தினத்தந்தி' சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக மாடுகள் அடக்கிய வீரருக்கு மோட்டார் சைக்கிள், சிறந்த மாட்டின் உரிமையாளருக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த வீரராக மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் தேர்வு பெற்றார். இவர் 13 மாடுகள் பிடித்து இருந்தார். 11 மாடுகள் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 2-ம் பரிசு பெற்றார். 3-ம் பரிசை 8 மாடுகள் பிடித்த நாமக்கல் மாவட்டம் காரைக்கிணறு பகுதியை சேர்ந்த சபரி பெற்றார்.

சிறந்த மாட்டுக்கான பரிசு சிவகங்கை மாவட்டம் சிறுங்காகோட்டை பகுதியை சேர்ந்த தவமணி என்பவருக்கு வழங்கப்பட்டது. 2-வது பரிசு மணப்பாறையை சேர்ந்த ஏ.கே.டி.ராஜா, 3-வது பரிசு சேலம் மாவட்டம் உளிப்புரம் பகுதியை சேர்ந்த ராஜா ஆகியோர் பெற்றனர்.

விழாவில் ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்