சூரியனை ஆய்வு செய்ய விரைவில் செயற்கை கோள் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜராஜன் தகவல்

சூரியனை ஆய்வு செய்ய விரைவில் செயற்கை கோள் அனுப்பப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.

Update: 2020-01-18 22:30 GMT
புதுச்சேரி, 

சூரியனை ஆய்வு செய்ய விரைவில் செயற்கை கோள் அனுப்பப்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.

புதுவை உப்பளம் பெத்திசெமினார் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 40 பிரமாண்ட படைப்புகளும், 300 தனிப்படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தெளிவு வேண்டும்

மாணவர்களின் மனதின் வேகம் ஈடு இணை இல்லாதது. எனவே மாணவர்கள் தங்களது மனதை தெளிவாக வைத்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தால்தான் புத்திசாலியாக இருக்க முடியும்.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் புதியவற்றை உருவாக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும். இதில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் பணி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளிடம் எப்போதும் முடியும் என்ற எண்ணத்தோடு பேசவேண்டும். எப்போதும் அவர்களை குற்றம் சொல்லக்கூடாது. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல் நமக்கு பிடித்ததை செய்யவேண்டும்.

இவ்வாறு ராஜராஜன் பேசினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூரியனை ஆய்வு செய்ய...

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கை கோளை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் சூரியனின் தன்மை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்.

நாட்டு மக்களின் மனிதவள மேம்பாட்டிற்கும், தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கவும், தகவல் தொடர்பு மற்றும் பல்வேறு தேவைகளுக்காகவும் செயற்கைகோள்கள் பயன்படுத்தப்படுகிறது. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு ஏவுதளம் அமைப்பது பல்வேறு செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு ராஜராஜன் கூறினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனர் கும்பகர்ணன், புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட கல்வித்துறை செயலாளர் ஜோசப்ராஜ், பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்