கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் 2 வாலிபர்களுக்கு தூக்குத்தண்டனை சிக்கமகளூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் 2 வாலிபர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிக்கமகளூரு,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா அப்சரகொடிகே கிராமத்தை சேர்ந்தவர் சுசிலா (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது).
கல்லூரி மாணவி
இவர் சிருங்கேரி டவுனில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் தனது கிராமத்தில் இருந்து ஒத்தையடி பாதையில் நடைபயணமாக நாகரகல்லு கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து சிருங்கேரிக்கு பஸ்சில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதுபோல் கல்லூரி முடிந்து திரும்பும் போதும் மாணவி சுசிலா சிருங்கேரியில் இருந்து பஸ்சில் நாகரகல்லு சென்று, பின்னர் அங்கிருந்து ஒத்தையடி பாதை வழியாக நடந்தே வீட்டுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி மாணவி சுசிலா கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் மதியம் தனது ஊருக்கு அவர் தனியாக திரும்பினார். நாகரகல்லு கிராமத்தில் இருந்து அப்சரகொடிகே கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கற்பழித்து கொலை
அந்த சமயத்தில் அவரை அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25), பிரதீப் (27) ஆகிய இருவரும் வழிமறித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து மாணவியை குண்டுக்கட்டாக அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர். பின்னர் இருவரும் மாறி, மாறி சுசிலாவை கற்பழித்துள்ளனர். உயிருடன் விட்டால் தங்களை போலீசில் காட்டிக் கொடுத்துவிடுவாள் என கருதிய இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து சுசிலாவை கொலை செய்துள்ளனர். மேலும் போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க சுசிலாவின் தங்க கம்மல், மூக்குத்தியை பறித்துள்ளனர். அதன் பின்னர் அவரது உடலை அந்தப் பகுதியில் பாழடைந்து கிடந்த 50 அடி ஆழ கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே கல்லூரிக்கு சென்ற சுசிலா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என சுசிலாவின் பெற்றோர், சிருங்கேரி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் 3 நாள் கழித்து அப்சரகொடிகே கிராமத்தின் காட்டுப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சுசிலா பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சுசிலா கற்பழிக்கப்பட்டு இருப்பதும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது தான் சந்தோஷ், பிரதீப் ஆகியோர் பல பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும், கல்லூரி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சுசிலாவை கற்பழித்து கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் என அறிவிப்பு
இதுதொடர்பாக சிக்கமகளூரு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நீதிபதி உமேஷ் எம்.அடிகா, கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் சந்தோஷ், பிரதீப் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இவர்கள் 2 பேரும் குற்றவாளிகள் என்றும், இவர்களுக்கான தண்டனை விவரம் 18-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
அதன்படி நேற்று காலை சிக்கமகளூரு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்த குற்றவாளிகள் சந்தோஷ், பிரதீப் ஆகியோரை சிருங்கேரி போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
தூக்குத்தண்டனை
இதைதொடர்ந்து நீதிபதி உமேஷ் எம்.அடிகா கோர்ட்டுக்கு வந்தார். அவர் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அப்போது குற்றவாளிகள் 2 பேருக்கும் தூக்குத்தண்டனை விதிப்பதாகவும், தலா ரூ.25 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பு அளித்தார். அதன் பின்னர் குற்றவாளிகள் 2 பேரும் பலத்த பாதுகாப்புடன் சிக்கமகளூரு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்புக்கு, கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.