போரூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் பங்கேற்பு
போரூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
பூந்தமல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை போரூர், மதுரவாயல் சுற்று வட்டார மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் போரூர் ரவுண்டானா அருகே நேற்று நடைபெற்றது.
சேக் தாவூத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தேசிய கொடிகளுடன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த சட்டம் முஸ்லிம் களுக்கு என்று எண்ணிவிடக்கூடாது. அதனால்தான் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறோம். இதை கண்டித்து பிப்ரவரி 15-ந் தேதி திருச்சியில் ‘தேசம் காப்போம்’ என்ற பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஆபத்தான இந்த சட்டம் குறித்து மோடி, அமித்ஷா மாறி, மாறி கருத்துகளை கூறி மக்களை குழப்பி வருகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும். அதுதான் நமது கோரிக்கை.
தந்தை பெரியார் எந்த இடத்திலும் ராமர் படத்தையும், சிலையையும் அவமதிக்கவில்லை. அதற்கான சான்றுகள் இல்லை. அந்த விளக்கத்தை திராவிட கழக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக கூறி இருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிழையை உணர்வார். அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.
பெரியாரை கொச்சைப்படுத்தும் விதமாக சங்பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றனர். சங்பரிவாரின் சதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகிவிடுவார் என்பதற்கு இது ஒரு சான்று. அவர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி போரூர் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.