காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்

தஞ்சை மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தோடு உணவருந்தியும் மகிழ்ந்தனர்.

Update: 2020-01-17 22:15 GMT
தஞ்சாவூர்,

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாட்டுப்பொங்கல் பண்டிகையும், நேற்று காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக தஞ்சை பெரியகோவில், சிவகங்கை பூங்கா, கல்லணை போன்ற இடங்களில் காணும் பொங்கல் விழா களைகட்டியது.

தஞ்சை பெரியகோவிலுக்கு ஏராளமானோர் காலைமுதலே வரத்தொடங்கினர். குடும்பம், குடும்பமாக வந்தவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிலர் வீடுகளில் சமையல் செய்து உணவு வகைகளை பாத்திரங்களில் கொண்டு வந்து புல்தரையில் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். கோவிலுக்கு வந்த அனைவரும் பலத்த சோதனைக்குப்பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

பெரியகோவிலுக்கு ஏராளமானோர் வந்திருந்ததால் கோவில் முன்புள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து வந்த பஸ்கள் எல்லாம் மேம்பாலம், நீதிமன்ற சாலை, காந்திசாலை வழியாக திருப்பி விடப்பட்டன. காணும் பொங்கலையொட்டி தஞ்சை அரண்மனை, கலைக்கூடம் ஆகிய இடங்களிலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகஅளவில் இருந்தது.

தஞ்சை சிவகங்கை பூங்கா பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் வெளியூரில் இருந்து வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பூங்கா மூடப்பட்டது தெரியாமல் பலர் குடும்பத்துடன் வந்து விட்டு திரும்பி சென்றனர். தஞ்சை ராஜராஜன் மணிமண்டபத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைத்து எடுத்து வந்து பூங்காவில் அமர்ந்து உணவருந்தினர். சிறுவர்கள், ராட்டினம், சறுக்கு விளையாட்டு, பலூன் சறுக்கு போன்றவற்றிலும் விளையாடி மகிழ்ந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் வல்லம் நம்பர்-1 சாலையோரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த வழியாக பஸ்கள் செல்வதற்கு இடையூறாக இருந்தது.

மாமன்னன் கரிகாலன்கட்டியதும், காவிரி டெல்டா மக்களின் பாசன தேவைகளுக்கு தண்ணீரை பகி்ர்ந்தளிக்கும் அணையாக உள்ள கல்லணையில் நேற்று காலையில் கூட்டம் குறைவாக இருந்தது. மாலையில் கூட்டம் அதிகரித்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கல்லணையின் அழகை கண்டு ரசித்தனர். கரிகாலன் பூங்கா, மாமன்னன் கரிகாலன் மணிமண்டபம் ஆகிவற்றில் மக்களின் கூட்டம் அதிகஅளவில் இருந்தது.

கல்லணைபாலங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளை காவல்துறையும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இதனால் கல்லணைக்கு வந்த மக்கள் இடையூறின்றி நடந்து அனைத்து அணைகள் மற்றும் பூங்காக்களை பார்வையிட்டனர்.

காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்துள்ள பொதுமக்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் ரோந்து சுற்றி வந்த வண்ணம் இருந்தனர்.

மேலும் செய்திகள்