மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: பொங்கல் பண்டிகைக்காக தாய் வீட்டுக்கு வந்த பெண் பலி
புதுச்சேரி சூரமங்கலத்தை சேர்ந்தவர் வரலட்சுமி (வயது 21). இவர் திருத்தணியை சேர்ந்த ஜேம்ஸ்குமார் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சூரமங்கலத்தை சேர்ந்தவர் வரலட்சுமி (வயது 21). இவர் திருத்தணியை சேர்ந்த ஜேம்ஸ்குமார் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பொங்கல் பண்டிகை கொண்டாட ஜேம்ஸ்குமார், வரலட்சுமி ஆகியோர் சூரமங்கலத்தில் உள்ள வரலட்சுமியின் தாய் வீட்டுக்கு வந்திருந்தனர். நேற்று ஜேம்ஸ்குமார் மோட்டார் சைக்கிளில் வரலட்சுமியுடன் சூரமங்கலத்தில் இருந்து கன்னியகோவில் கிராமத்தில் உள்ள உறவினரை பார்க்கச் சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கரிக்கலாம்பாக்கம் மெயின்ரோட்டில் அவர்கள் சென்றபோது ஜேம்ஸ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் ஜேம்ஸ்குமார், வரலட்சுமி ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வரலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஜேம்ஸ்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ், ஏட்டு சந்திரகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.