திருச்சியில் துப்பாக்கியால் சுட்டு என்ஜினீயர் தற்கொலை
திருச்சியில் பயிற்சி அகாடமி நடத்தி வந்த என்ஜினீயர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செம்பட்டு,
திருச்சி விமானநிலையம் அருகே சந்தோஷ்நகரை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் மாநகராட்சியில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் சசிகுமார்(வயது 30). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சந்தோஷ்நகரில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியில் பார்ன் ஷூட்டர்ஸ் அகாடமி என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி நிறுவனத்தை கடந்த 2 ஆண்டாக நடத்தி வந்தார்.
இவரது பயிற்சி நிறுவனத்தில் ஏராளமானோர் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரத்யேகமான துப்பாக்கிகளை வாங்கி வைத்து இருந்தார். மேலும், பயிற்சி நிறுவனத்தை அவர் முறைப்படி அனுமதி பெற்று நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சசிகுமாரும் துப்பாக்கி சுடுதலில் கைத்தேர்ந்தவர். இவர் கல்லூரி படித்த காலத்திலேயே பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள் ளார். இந்தநிலையில் நேற்று காலையில் சசிகுமார் மற்றும் அவரது தாயார் ரெஜினா ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் அறையில் இருந்து திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. இதனால் பதறிப்போன ரெஜினா ஓடி சென்று அறையின் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சசிகுமார் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விமானநிலைய போலீசார் சசிகுமார் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி, ரத்தக்கறை படிந்த துணி உள்பட பல்வேறு தடயங்களை சேகரித்தனர். அப்போது சசிகுமார் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்தியது 0.22 சிங்கிள் பேரல் ரைபிள் வகையை சேர்ந்தது என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என அவரது தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். சசிகுமாருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் அவருக்கு வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்க்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு பிடிக்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையால் இந்த முடிவை எடுத்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையே சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி விமானநிலைய பகுதியில் துப்பாக்கியால் சுட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.