திண்டுக்கல்லில் பயங்கரம்: கார் டிரைவர் குத்திக்கொலை - வாலிபர் கைது

திண்டுக்கல்லில், முன்விரோதத்தில் கார் டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-01-17 23:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரை சேர்ந்தவர் ரியாசுதீன். அவருடைய மகன் அன்வர்இப்ராகிம் (வயது 27). கார் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இப்ராகிம்ஷா (35) என்பவருக்கும் இடையே மோட்டார் சைக்கிளை எரித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் 2 பேரும் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அன்வர்இப்ராகிம் பேகம்பூரில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இப்ராகிம்ஷா, மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற இப்ராகிம்ஷா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்வர்இப்ராகிமை சரமாரியாக குத்தினார்.

படுகாயமடைந்த அன்வர்இப்ராகிம், அதே கத்தியை பிடுங்கி இப்ராகிம்ஷாவை குத்தினார். ஆனாலும் அவரால் நீண்ட நேரம் இப்ராகிம்ஷாவை தடுக்க முடியவில்லை. இதற்கிடையே அன்வர்இப்ராகிமிடம் இருந்து தனது கத்தியை கைப்பற்றிய இப்ராகிம்ஷா, அவருடைய உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தினார்.

இதில் நிலை குலைந்து போன அன்வர்இப்ராகிம், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இப்ராகிம்ஷாவும் அங்கேயே மயங்கி விழுந்தார். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் விரைந்து சென்று அன்வர்இப்ராகிமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்ராகிம்ஷாவை கைது செய்து, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அன்வர்இப்ராகிமுக்கு நஸ்ரின் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்