திருவள்ளுவர் தினத்தன்று மதுபாட்டில்கள் விற்ற பெண்கள் உள்பட 60 பேர் கைது
திருவள்ளுவர் தினத்தன்று மதுபாட்டில்கள் விற்றதாக 2 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பண்ருட்டி,
ஆண்டுதோறும் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள் அடைக்கப்பட்டிருக்கும். அதன்படி கடலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் சிலர், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி, தங்களது வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.
திருவள்ளுவர் தினத்தன்று உத்தரவை மீறி யாரேனும் மதுபாட்டில்கள் விற்பனை செய்கிறார்களா? என்று கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதிகாரிகள் கண்காணித்ததாக தெரியவில்லை. பல இடங்களில் மதுபாட்டில்கள் விற்பனை படுஜோராக நடந்தது.
இந்த நிலையில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான போலீசார் பண்ருட்டி லிங்காரெட்டிப்பாளையம் சக்திநகரில் உள்ள ஜெயச்சந்திரன்(வயது 47) என்பவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஒரு அறையில் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 17 அட்டைபெட்டிகளில் 800 மதுபாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும், டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களாகும். இது தொடர்பாக ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, அதனை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 800 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பண்ருட்டி அன்வர்ஷாநகரை சேர்ந்த ரகுநாத்(36) என்பவருடைய வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வல்லம் வீரன்கோவில் தெருவில் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக ஆறுமுகம் மகன் தமிழ்செல்வன்(27), நாச்சிவெள்ளையன்குப்பம் முந்திரிதோப்பில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக சமட்டிக்குப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மாயகிருஷ்ணன்(30) ஆகிய 2 பேரையும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தன்று கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றதாக 2 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 1,459 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.