காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் - உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்

காணும் பொங்கலான நேற்று சுற்றுலா தலங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து, குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2020-01-17 22:15 GMT
விழுப்புரம், 

தை மாதத்தில் 3-வது நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 15-ந்தேதி தை பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று காணும் பொங்கலை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த நாளில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர்களின் ஆசியை பெறுவதும் இந்த பண்டிகையின் நோக்கமாகும். இதற்காக பொழுது போக்கு இடங்களில் மக்கள் அதிகளவில் குவிந்து குழந்தைகள் மற்றும் தங்களது நண்பர்கள், உறவினர்களை சந்தித்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடி குதூகலமடைந்தனர்.

அந்த வகையில், காணும் பொங்கலான நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாதலமாக விளங்கும் செஞ்சி கோட்டைக்கு காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானதால், அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக கோட்டையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ராஜா மற்றும் ராணி கோட்டை, கல்யாணமகால் ஆகியவற்றை சுற்றி பார்த்த பொதுமக்கள், அங்குள்ள புல்வெளி பகுதியில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் கோட்டை வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர், வெங்கட் ரமணர், சிவன் கோவில்களுக்கு சென்றும் அவர்கள் வழிபட்டனர்.

செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சீனுவாசன், மதுசூதனன், சுபா உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோட்டை பாதுகாப்பு அலுவலர் ஹரிஷ் மேற்பார்வையில் ஏராளமான பணியாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுலாதலமாக விளங்குகிறது கல்வராயன்மலை. இங்கு கவியம், மேகம், பெரியார் உள்பட 9 நீர் வீழ்ச்சிகள், படகு குழாமும் உள்ளது. காணும் பொங்கலான நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கல்வராயன்மலையில் குவிந்தனர். அவர்கள் பெரியார் நீர் வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் படகு குழாமுக்கு சென்று உற்சாகமாக படகு சவாரி செய்து வனப்பகுதியை ரசித்தனர். அப்போது சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள பூங்காவில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் சிறுவர்கள் பூங்காவில் விளையாடி உற்சாகமடைந்தனர்.

இதேபோல் பிரம்மதேசம் அருகே ஓமிப்பேர் கிராமத்தில் பொரையாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதியை சேர்ந்தவர்களின் குல தெய்வகோவிலாக விளங்குகிறது. ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்து கோவிலில் வைத்து பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். அதன்படி நேற்று அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சீர்வரிசை பொருட்களுடன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அனைவரும் அங்குள்ள அரசமரத்தடியில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்