கவர்னர் கிரண்பெடி நிகழ்ச்சியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
மாகியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
புதுச்சேரி,
மாகியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் போராட்டம்
புதுவை கவர்னர் கிரண்பெடி 2 நாள் பயணமாக புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாகிக்கு சென்றுள்ளார். நேற்று அவர் அங்கு அரசு அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
தொடர்ந்து மகாத்மா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார். அப்போது கல்லூரியில் கூடியிருந்த மாணவ, மாணவிகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மத்திய அரசுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
மாணவர்கள் மீது தாக்குதல்
இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த போலீசார் மாணவ, மாணவிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் மாணவ, மாணவிகளை சுற்றிவளைத்த போலீசார் தடியடி நடத்தி கண்மூடித்தனமாக தாக்கினார்கள். சாதாரண உடையில் இருந்த போலீசார் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து மாணவ, மாணவிகளை தாக்கினார்கள். சில போலீசார் மாணவர்களை காலால் எட்டி உதைத்தனர்.
சிதறி ஓடினார்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். போலீசாரின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு இடையேயும் கவர்னர் கிரண்பெடி அந்த கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.