காணும் பொங்கலையொட்டி ஏற்காடு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
காணும் பொங்கலையொட்டி ஏற்காடு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம்,
தமிழகம் முழுவதும் கடந்த 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் விழாவும், 3-வது நாளான நேற்று காணும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. அதாவது காணும் பொங்கலையொட்டி, குடும்பத்தினர் அனைவரும் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருவதை காலம், காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
அதன்படி காணும் பொங்கல் விழாவான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
சேலம் அருகே வனத்துறைக்கு சொந்தமான குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நேற்று காலையில் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் வரத்தொடங்கினர். பூங்காவில் உள்ள மான்கள், முயல், குரங்கு, முதலை, பறவைகள் உள்ளிட்டவைகளை பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும், பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் டைனோசர் உள்ளிட்ட விலங்குகளின் சிற்பங்கள் அருகில் சுற்றுலா பயணிகள் நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்துக்கொண்டனர். சிறுவர், சிறுமிகள் பூங்காவில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அதிகளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வந்ததால் உயிரியல் பூங்கா நேற்று களைகட்டியது.