வரி ஏய்ப்பு புகார் எதிரொலி நடிகை ரஷ்மிகா, விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவு அதிகாரிகள் நடவடிக்கை
நடிகை ரஷ்மிகா வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
குடகு,
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ரஷ்மிகா வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
நடிகை ரஷ்மிகா
கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவர் நடிக்க வந்து குறுகிய காலத்திலேயே பிரபலமாகி விட்டார். இவருடைய சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகே உள்ள குக்குலூரு கிராமம் ஆகும்.
நடிகை ரஷ்மிகா நடிப்புத் தொழிலுக்கு வந்து 4 வருடங்களே ஆகிறது. அதற்குள் அவர் ஏராளமான சொத்து சேர்த்து விட்டதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான புகார்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் சென்றன.
வருமான வரித்துறை அதிகாரிகள்
அதன்பேரில் நேற்று முன்தினம் காலையில் குக்குலூரு கிராமத்தில் உள்ள ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். போலீசாருடன் வாடகை கார்களில் ரஷ்மிகாவின் வீட்டுக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கு விடிய, விடிய சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை விடிய, விடிய நடந்தது. சோதனையின்போது நடிகை ரஷ்மிகா வீட்டில் இல்லை. அவர் படப்பிடிப்புக்காக சென்னைக்கு சென்றிருந்தார். அவருடைய குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்
இதையடுத்து அதிகாரிகள் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும், பீரோக்கள், லாக்கர்கள் என அனைத்திலும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.
இந்த சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் ரஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சொத்துகள் வாங்கி குவித்திருப்பது பற்றியும், வரி ஏய்ப்பு செய்திருப்பது பற்றியும் கேள்விகளைக் கேட்டு தகவல்களை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பல கோடி ரூபாய் சொத்துகள்
இதேபோல் நடிகை ரஷ்மிகாவுக்கு சொந்தமான விராஜ்பேட்டையில் உள்ள செரினிட்டி ஹால் ஐஷாராமி திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை ரஷ்மிகாவுக்கு வீடு, திருமண மண்டபம் தவிர சொந்தமாக விளம்பர நிறுவனமும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகளும் உள்ளதாக தெரிகிறது.
அவை தவிர மைதாடி அன்னூர் கிராமத்தில் 3 ஏக்கர் காபி தோட்டம், 5.50 ஏக்கர் நிலம், விராஜ்பேட்டை விஜயநகரில் ஒரு வீடு ஆகியவை ரஷ்மிகாவின் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்மிகாவின் தந்தை மதன் மஞ்சண்ணா, தாய் சுமன் ஆகியோரின் பெயர்களிலும் கடந்த ஒரு வருடத்திற்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பதிவாகி உள்ளன.
விடிய, விடிய விசாரணை
இது ஒருபுறம் இருக்க ரஷ்மிகா தனது தந்தை மதன் மஞ்சண்ணா பெயரில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்து குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
பின்னர் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேரில் ஆஜராக உத்தரவு
பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக இதுதொடர்பான விசாரணைக்கு பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ரஷ்மிகாவும், அவருடைய பெற்றோரும் விரைவில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ரஷ்மிகா படப்பிடிப்புக்காக சென்னையில் இருப்பதால் அவர் அங்கிருந்து இன்னும் சில தினங்களுக்குள் பெங்களூருவுக்கு வந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராவார் என்று தெரிகிறது.