நிழல் உலக தாதாவை இந்திரா காந்தி சந்தித்ததாக கூறியதற்கு எதிர்ப்பு சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்ததாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.;
மும்பை,
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்ததாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
சர்ச்சை பேச்சு
புனேயில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு காலத்தில் மும்பையில் யார் போலீஸ் கமிஷனராக இருக்க வேண்டும், மந்திராலயாவில் யார் இருக்க வேண்டும் என நிழல் உலக தாதாக்கள் தான் முடிவு செய்தனர். தாதா ஹாஜி மஸ்தான் மந்திராலயா வந்தால், அவரை பார்ப்பதற்காக ஒட்டு மொத்த தலைமைச்செயலகமும் கீழே இறங்கி வந்துவிடும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அப்போதைய நிழல் உலக தாதாக்களில் ஒருவரான கரீம் லாலாவை பைதானியில் சந்தித்தார். தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல், சரத்ஷெட்டி ஆகியோர் மும்பை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். ஆனால் அந்த நிழல் உலக தாதாக்கள் யாரும் இப்போது இல்லை. அனைவரும் வெளிநாடு தப்பிச்சென்று விட்டனர் என்று கூறினார்.
தாதா கரீம் லாலாவை இந்திராகாந்தி சந்தித்ததாக சஞ்சய் ராவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் அதிருப்தி
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் நிலையில், இந்திரா காந்தி தொடர்பான சஞ்சய் ராவத்தின் கருத்து காங்கிரசுக்கு அதிருப்தியை உண்டாக்கியது. இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சஞ்சய் ராவத் பேசியிருப்பது முற்றிலும் தவறானது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற கருத்துக்களை யாரும் தெரிவிக்க கூடாது, என்றார்.
மும்பையை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திரா காந்தி உண்மையான தேசபக்தர். தேசத்தின் பாதுகாப்பில் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொண்டது கிடையாது. இறந்த பிரதமர்களின் பெயருக்கு களங்கம் விளைப்பதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும். முன்னாள் மும்பை காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் சஞ்சய் ராவத் தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார்.
முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமும் சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினார்.
திரும்ப பெற்றார்
எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சஞ்சய் ராவத் தனது கருத்தை திரும்ப பெற்றார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திரா காந்தி தொடர்பாக எனது கருத்து அவரது பெயருக்கோ அல்லது யாருடைய உணர்வுகளையோ புண்படுத்தியதாக கருதினால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். கடந்த காலங்களில், நான் இந்திரா காந்திக்கு ஆதரவாக பேசியிருக்கிறேன். அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றவர்களுடன் வாக்குவாதம் செய்து இருக்கிறேன். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில காங்கிரஸ் தலைவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.