சிலை அமைக்க பணம் இருக்கிறது, பொது சுகாதாரத்துக்கு இல்லையா? மராட்டிய அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்

சிலை அமைக்க பணம் இருக்கிறது பொது சுகாதாரத்திற்கு இல்லையா? என அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-01-16 22:30 GMT
மும்பை, 

சிலை அமைக்க பணம் இருக்கிறது பொது சுகாதாரத்திற்கு இல்லையா? என அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுநலன் மனு

மும்பை பரேலில் உள்ள பாய் ஜெராபாய் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் நிவ்ரோஜி வாடியா மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றிற்கு மாநகராட்சி மற்றும் மாநில அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என புகார் எழுந்தது.

இந்த மருத்துவமனைகளுக்கு போதிய நிதி ஒதுக்க உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் ஆர்.ஐ.சாக்லா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “வாடியா ஆஸ்பத்திரிக்கு ரூ.24 கோடியை மாநில அரசின் நிதித்துறை அனுமதித்துள்ளது. 3 வாரங்களுக்குள் மொத்த தொகையும் ஒதுக்கப்படும்” என்றார்.

இதேபோல பாய் ஜெராபாய் குழந்தைகள் மருத்துவமனைக்கு ரூ.14 கோடி ஒதுக்கப்படுவதாகவும் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதிருப்தி அளிக்கிறது

இதையடுத்து நீதிபதிகள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து கூறியதாவது:-

இது அதிருப்தி அளிக்கிறது. இந்த தொகை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) வழங்கப்படவேண்டும். இந்த அரசு சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமான சட்டமேதை அம்பேத்கர் சிலையை கட்ட விரும்புகிறது. இதற்கு எல்லாம் பணம் இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் யாருக்காக பாடுபட்டாரோ அவர்கள் சாக வேண்டுமா?

நோயில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவி தேவையா அல்லது சிலை தேவையா? பொது சுகாதாரத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்கவில்லை. அதை விடுத்து முதல்-மந்திரி பாலங்களை திறப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

நாட்டின் வணிக தலைநகராக கருதப்படும் மும்பையில், ஏழை நோயாளிகளை அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கிறது. இது அருவருக்கத்தக்கது.

இறக்கும் குழந்தைகள்

ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மராட்டியத்திலும் இதே நிலைமை ஏற்படவேண்டுமா?

நோயாளிகள் ஏற்கனவே ஏழ்மையான நிலையில் உள்ளனர். அவர்களால் தனியார் மருத்துவமனையை நாடி செல்ல முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் நிதி ஒதுக்கப்பட்டதாக அறிக்கை அளிப்பதன் மூலம் யாரையும் சமாதானப்படுத்த முடியாது.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

இதையடுத்து வழக்கை இன்றைக்கு (வெள்ளிக் கிழமை) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்