மனைவி கண்டித்ததால் மகனுடன் லாரி டிரைவர் தற்கொலை
மனைவி கண்டித்ததால் மகனுடன் லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த முத்திகை நல்லான் குப்பம் பகுதி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 46) லாரி டிரைவரான இவரது மனைவி சுந்தரி (42). மகன்கள் வெற்றிவேல் (14), தேவா (10). இதில் வெற்றிவேல் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேவா 5-ம் வகுப்பு படித்து வருகிறார். குடி பழக்கம் உள்ள பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சுந்தரி அருகில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
சற்று நேரத்தில் பாட்டி வீட்டுக்கு வந்த தேவா தனது தாயாரிடம் அப்பா, அண்ணன் இருவரும் தூக்கு மாட்டியுள்ளதாக தெரிவித்தான். உடனடியாக தனது வீட்டுக்கு வந்த சுந்தரி கணவனும், மகனும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.