உயர் அதிகாரி திட்டியதால் ஆவின் ஊழியர் தற்கொலை முயற்சி - போலீஸ் விசாரணை

உயர் அதிகாரி திட்டியதால் ஆவின் ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-16 23:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே உள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம் (வயது 38). இவர், திண்டுக்கல் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால்பண்ணையில் கொதிகலன் இயக்குபவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த இவர், யாரிடமும் பேசாமல் இருந்தார். இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள், அவரை அவ்வப்போது கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு அறைக்குள் சென்ற ஜஸ்டின் திரவியம், திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், ஓடிச்சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற போலீசார், ஜஸ்டின் திரவியத்திடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் அவர் பதிலளிக்கும் நிலையில் இல்லை. இதையடுத்து அவருடைய சட்டைப்பையை சோதனையிட்டனர்.

அப்போது அதில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், நான், பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தில் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில் பணிக்கு வந்திருந்தேன். மேலாளர் தினகரன் பாண்டியன், எனக்கு சில பணிகளை ஒதுக்கினார்.

அந்த பணிகளை நான் செய்துகொண்டிருந்தேன். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றேன். அந்த நேரத்தில் தினகரன் பாண்டியன் வந்து, நான் எங்கு சென்றேன் என்று கேட்டுள்ளார். நான் சாப்பிட சென்றதை அறியாத சிலர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக அவரிடம் கூறினர். இதையடுத்து அவர் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையின் நிர்வாக அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். மேலும் என்னையும் அவதூறாக பேசி திட்டினார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான நான் இன்று (அதாவது நேற்று) வேலைக்கு வந்ததும் விஷம் குடித்துவிட்டேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து தினகரன் பாண்டியனிடம் கேட்ட போது, மதிய உணவு இடைவேளை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மட்டுமே. ஆனால் அவர் 3 மணிக்கு மேல் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். அதுகுறித்து எனக்கு தகவல் வரவில்லை. மேலும் அவர் இதுபோல் தொடர்ந்து பணிக்கு தாமதமாக வந்துகொண்டிருந்தார்.

வேலைக்கு தாமதமாக வருவது குறித்தே அவரிடம் விளக்கம் கேட்டேன். அவதூறாக பேசவில்லை. அவர் என் மீது கூறிய புகாரில் உண்மை இல்லை என்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவின் ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பர பரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்