கிரிவலப் பாதையில் இசையமைப்பாளர் அனிருத் சார்பில் கட்டப்பட்ட நிழற்குடை; கலெக்டர் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவில் அருகே ‘தர்பார்’ பட இசையமைப்பாளர் அனிருத் சார்பில் பக்தர்களின் வசதிக்காக ரூ.18 லட்சம் மதிப்பில் புதியதாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
நிழற்குடை திறப்பு விழாவிற்கு இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தையும், நடிகருமான ரவிசந்திர் ராகவேந்திரா தலைமை தாங்கினார். தயாரிப்பாளர் ரமணன், தொழிலதிபர் ஆகாஷ் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்ததாரர் ராஜன்பாபு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார்.
விழாவில் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் பூபாலன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் அருணா, தாசில்தார் அமுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கிரிவலப் பாதையில் 5 இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பில் பக்தர்களின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.