ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயில் தடம் புரண்டது

ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதமாக சென்றது.

Update: 2020-01-16 22:15 GMT

ஜோலார்பேட்டை, 

மேட்டூர் அணை ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயில் சென்னை பேசின் பிரிட்ஜ் நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த ரெயில் இரவு 10 மணி அளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே வரும்போது 9–வது பிளாட்பாரத்தில் சரக்கு ரெயில் என்ஜின் திடீரென்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இதனால் ரெயில் என்ஜினின் முன் பகுதியில் உள்ள 3 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டன. உடனடியாக என்ஜின் டிரைவர் சரக்கு ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர், ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரெயில் என்ஜினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு சரக்கு ரெயிலின் பின்புறம் இணைக்கப்பட்டு அந்த சரக்கு பெட்டிகளை இணைத்து திருப்பத்தூர் ரெயில் நிலையம் நோக்கி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மீட்பு குழுவினர் தடம் புரண்ட ரெயில் என்ஜினை சுமார் 2 மணி நேரம் போராடி நள்ளிரவு 12 மணியளவில் சரி செய்தனர்.

இதனால் கன்னியாகுமரி – மும்பை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்திலும், யஷ்வந்த்பூர்–ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்திலும், ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சாமல்பட்டி ரெயில் நிலையத்திலும், பழனியில் இருந்து சென்னைக்கு செல்லும் பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் தொட்டம்பட்டி ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.

இதனால் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சுமார் 1½ நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்