பொங்கல் விழாவையொட்டி மஞ்சள் கொத்துகள் – கரும்புகள் விற்பனை அமோகம்

பொங்கல் விழாவையொட்டி புதுக்கோட்டை நகரில் மஞ்சள் கொத்துகள் மற்றும் கரும்புகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-01-14 22:45 GMT

புதுக்கோட்டை, 

பொங்கல் விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருமணமான பெண்களுக்கு, அவர்களது தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். இந்த பொங்கல் சீர்வரிசையில் கரும்பு, காய்கறிகள், மஞ்சள் கொத்து மற்றும் அவர்களது தகுதிக்கு ஏற்ப சில்வர், பித்தளை போன்ற பாத்திரங்கள் உள்ளிட்டவை கொடுப்பது வழக்கம்.

பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்கும், பொங்கல் நாளில் அதிகாலையில் பொங்கல் வைப்பதற்கு மஞ்சள் கொத்து அவசியம் என்பதால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், கறம்பக்குடி, அன்னவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்துகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பொங்கல் நெருங்குவதால் மஞ்சள் கொத்துகளின் விற்பனை சூடு பிடித்து உள்ளது.

மழையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயலில் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் கொத்துகளை நேரடியாக புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து, கீழராஜவீதி, சாந்தநாதசுவாமி கோவில் பகுதி, திலகர் திடல் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மஞ்சள் கொத்துவை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரு மஞ்சள் கொத்து ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கரும்புகளை மொத்தமாக வாங்கி வந்து, புதுக்கோட்டை நகரில் ஆங்காங்கே சாலையின் ஒரத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஒரு கரும்பு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவிற்கு தேவையான கரும்பு, மஞ்சள் போன்றவை கறம்பக்குடி பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. இதேபோல மண்பானைகள் தயாரிப்புக்கும் கறம்பக்குடி பகுதி பெயர் பெற்றது ஆகும். இதனால் கறம்பக்குடியில் நடைபெறும் 5 நாள் பொங்கல் சந்தை பிரபலமானது ஆகும். இந்நிலையில் கறம்பக்குடியில் நேற்று நடைபெற்ற சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. கரும்பு கட்டுகள் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகளே நேரடியாக சந்தைப்படுத்தி விற்பனை செய்ததால் விலை சீராக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதேபோல மஞ்சள் கொத்துகளும் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல மண்பானைகள் வாங்கவும் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. சில பானைகள் ரூ.50–க்கும், பொங்கல் பானைகள் ரூ.70–க்கும், அடுப்பு ரூ.300–க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல கோலப்பொடிகள் விற்பனையும் அமோகமான நடைபெற்றது.

இதேபோல வடகாடு அருகே உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஏராளமான, மஞ்சள் கொத்துக்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன. 3 மஞ்சள் கொத்துக்கள் ரூ.40–க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வடகாடு மார்க்கெட் பகுதியில் பொங்கல் பானை, அடுப்பு, மஞ்சள் கொத்துக்கள், அகப்பைகள், கோலப்பொடிகள், கரும்பு கட்டுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்பட்டன. மேலும் கீழாத்தூர், மாங்காடு, அனவயல், எல்.என்.புரம், புள்ளான்விடுதி, கருக்காகுறிச்சி, நெடுவாசல், புளிச்சங்காடு கைகாட்டி போன்ற பகுதிகளில் சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆலங்குடி வாரச்சந்தையில் அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்காக அடுக்க வைக்கப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு அதிகபட்சமாக ரூ.150–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு கட்டு கரும்பு ரூ.350 வரை விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆலங்குடி வாரச்சந்தைக்கு இலுப்பூர், அன்னவாசல், பெருஞ்சுனை, அரசர்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்