பொங்கல் பண்டிகையின்போது ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கவேண்டும் - மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு

பொங்கல் பண்டிகையின்போது ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2020-01-13 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுக்களாக கொடுத்தனர்.

இந்து மக்கள் கட்சி மாநில விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் கிடாய், சேவல், டியூப் லைட், கழிவறை குழாய், தண்ணீர் கேன் போன்றவற்றுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கிடாய், சேவலுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி கிடையாது என்றனர். அதன் பின்னர் அவர்கள் ஆடு, சேவல், கழிவறை குழாய், தண்ணீர் கேன் போன்றவற்றை வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்றனர். பின்னர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

பொங்கல் திருநாளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு, கிடாய் முட்டு, ரேக்ளா ரேஸ், சிலம்பம், கபடி போன்ற பாரம்பரியமான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் தமிழக இளைஞர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்த கூடியது. ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு, கிடாய் முட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தடை உள்ளது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் கொண்டு வந்து பல்வேறு பகுதிகளில் போட்டிகள் நடந்து வருகிறது. இதைப்போன்று சேவற்கட்டு, கிடாய் முட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற போட்டிகளும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஈரோடு வழியாக செல்கிறார்கள். அவர்களுக்கு போதிய வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, தங்கும் வசதி, உணவு, குடிநீர் போன்ற வசதிகளை இந்து அறநிலையத்துறை சார்பில் இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் கோபால் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பற்றி தரக்குறைவாகவும், இழிவு படுத்தும் விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரியாக 4 முறையும், எம்.பி.யாகவும் இருந்துள்ள ஒரு தேசிய தலைவரை பற்றி தரக்குறைவாக பேசி உள்ள நெல்லை கண்ணன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கொடுத்திருந்த மனுவில், ‘சித்தோடு பேரூராட்சியில் ஓடைக்காடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 33 பேர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள். தற்போது இவர்களது குடிசைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே இவர்கள் தொடர்ந்து அங்கு வசிக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, அங்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்