10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான 2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் - தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை
மகேந்திரமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைதான 2 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரலாறு பாட ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த லட்சுமணன் (வயது 38), சின்னமுத்து (34) ஆகிய 2 பேர் அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் செல்போனுக்கு காதல் கவிதைகள், ஆபாச வார்த்தைகளை அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி, தனது குடும்பத்தினரிடம் கூறி உள்ளார். இதுபற்றி அறிந்த ஊர்பொதுமக்கள் நேற்று முன்தினம் அந்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் லட்சுமணன், சின்னமுத்து ஆகிய 2 பேரையும் தாக்கினார்கள். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். பின்னர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக 2 பேரையும் அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் லட்சுமணன், சின்னமுத்து ஆகிய 2 பேர் மீதும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் ஆசிரியர்கள் லட்சுமணன், சின்னமுத்து ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக 2 ஆசிரியர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து 2 ஆசிரியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.