திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி பிளஸ்-2 மாணவியை குஜராத் கடத்தி சென்ற டிரைவர் ‘போக்சோ’வில் கைது
கல்பாக்கத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவரை ஏமாற்றி குஜராத் கடத்தி சென்ற வேன் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கல்பாக்கம்,
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த மாதம் 6-ந் தேதி மாலை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, இது குறித்து கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமு வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி குஜராத் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மாயமான மாணவி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவியை மீட்டு, மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகனான கணேஷ் (25) என்ற வேன் டிரைவர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலித்து ஏமாற்றி குஜராத் மாநிலத்துக்கு கடத்தி சென்றதாக அந்த மாணவி தெரிவித்தார்.
மேலும், அதற்கு டிரைவரின் தாயாரான சுஹாசினி என்பவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதியன்று புதுப்பட்டினம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே தலைமறைவாக இருந்த வேன்டிரைவரான கணேசை போலீசார் மடக்கிப்பிடித்து, போக்சோ சட்டத்தில் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சுகாசினியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.