காணும் பொங்கலன்று மாமல்லபுரம் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் இயக்க தடை - போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை
மாமல்லபுரத்தில் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் திரண்டு வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக நகரினுள் உள்ள பஸ் நிலையத்திற்குள் பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்,
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்படும் காணும் பொங்கலன்று லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் திரண்டு வருவார்கள் என்று தெரிகிறது.
இதனால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காணும் பொங்கல் அன்று மட்டும் மாமல்லபுரம் நகரினுள் உள்ள பஸ் நிலையத்திற்கு பஸ்கள் சென்று வர தடை செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மாமல்லபுரம் கிழக்குக்கடற்கரைச்சாலை புறவழிச்சாலையில் உள்ள மாமல்லன் சிலை அருகில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் மாமல்லபுரம் நகரில் உள்ள குறுகிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் அனைத்து பஸ்களும் புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கி விட்டுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் நகருக்குள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல நேரிடும் என்பதால் புறவழிச்சாலையில் இருந்து நகரில் உள்ள அனைத்து புராதன மையங்களுக்கும் ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கவும் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதற்காக துணை கோட்ட அலுவலகத்தில் மாமல்லபுரம் பகுதி அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களிடமும் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலந்து கொண்டார்.
அப்போது ஆட்டோ ஓட்டுனர்களிடம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேசுகையில், ‘காணும் பொங்கலன்று வரும் சுற்றுலா பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் நல்லுறவுடன் பழக வேண்டும். பொதுமக்களிடம் முறையான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. நகருக்குள் போக்குவரத்துக்கு இடையூராக ஏற்படுத்தும் விதமாக ஆட்டோக்களை இயக்க கூடாது’ போன்ற அறிவுறைகளை வழங்கினார்.
அதன் பின்னர், காணும் பொங்கலன்று நகருக்குள் இயக்கப்படும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி பாஸ் வழங்குவதற்காக அவர்களது விவரங்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் உள்ளிட்ட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.