வறுமையை ஒழித்தால் தான், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்க முடியும்

வறுமையை ஒழித்தால் தான் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்தை பிடிக்க முடியும் என்று திருச்சி கல்லூரி விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.;

Update: 2020-01-10 22:30 GMT
திருச்சி,

திருச்சி தேசிய கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றாண்டு விழா நினைவு தூண் கல்வெட்டினை திறந்து வைத்தார். மேலும் நூற்றாண்டு விழா நினைவு தபால் உறையை அவர் வெளியிட, அதனை கல்லூரியின் நிர்வாக குழு துணை தலைவர் ஜேகர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ரகுநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வெங்கையா நாயுடு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய அளவில் உயர் கல்வியின் வளர்ச்சியானது 26 சதவீதம் அளவில் உள்ளது. தமிழகம் உயர்கல்வியில் 46.9 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு அரசு மட்டும் இன்றி இதுபோன்ற கல்வி நிறுவனங்களின் ேசவையும் ஒரு காரணம் ஆகும். வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பன்னாட்டு கம்பெனிகளின் தலைமை பதவியில், இந்தியர்கள் குறிப்பாக தென்னிந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர்்.

ஆனாலும் உலகில் உள்ள 500 பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 300 இடங்களுக்குள் இந்தியாைவ சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை. ஏன் இந்த நிலை? இந்தியாவில் படித்து வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் இந்தி்யாவின் வளர்ச்சிக்காகவும் உழைக்கவேண்டும்.

நமது நாட்டில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தும் உலக தரவரிசை பட்டியலில் நாம் இடம் பெறமுடியாமல் போவது ஏன்? நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் சிறந்த பொருளாதார நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி கொள்கை பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பழமையான கலை, கலாசாரத்தை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும். நமது மாணவர்கள் நிறைய படித்து, எவ்வளவு அதிகமாக சம்பாதித்தாலும் பெற்ற தாய், பிறந்த தாய்நாடு, தாய்மொழியை ஒரு போதும் மறந்து விடக்கூடாது. விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், எனது தாய்மொழியில் தான் கல்வி கற்றேன். பள்ளிக்கு 3 கி.மீ தூரம் நடந்து சென்று தான் படித்தேன். தாய்மொழியில் கல்வி கற்ற நான், இன்று நமது நாட்டின் இரண்டாவது குடிமகனாக உயர்ந்த பதவியில் இருக்கிறேன்.

எனவே அனைத்து மாநிலங்களிலும் அதிகாரிகள் அவர்களது தாய்மொழியிலேயே பேசவேண்டும். இந்தி தெரிந்ததால் நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் ெசய்து பேச முடிகிறது. எந்த மொழியையும் திணிக்க கூடாது, அதே நேரத்தில் எதிர்க்கவும் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடு.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 24 வயது வரையிலான இளைஞர்கள் 50 கோடி பேர் இருக்கிறார்கள். பண்டையக்காலத்தில் நாளந்தா, விக்கிரமசீலா போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்ததால் இந்தியா உலகின் கல்வி குரு என்ற பட்டத்தை பெற்றிருந்தது. இத்தகைய தொன்மைக்கால புகழை மீட்டெடுக்க நமது நவீன கல்வி முறையில் பண்டையக்கால பாடங்கள், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இணைக்கவேண்டும்.

தனியார் துறையினர் கல்வியில் முதலீடு செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். இந்தியாவின் எதிர்காலம் திறன்மிக்க பொதுத்துறை-தனியார் துறை ஒத்துழைப்பில் தான் இருக்கிறது. கல்வியில் முதலீடு செய்வது நாட்டின் ஒளிமிக்க எதிர்காலத்திற்கு முதலீடு செய்வதற்கு ஒப்பாகும். இதன்மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6 சதவீதம் அளவிற்கு உயரும்.

2022-ம் ஆண்டு இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார உயர்வை அடைய வேண்டும் என்பது நமது இலக்காகும். இந்த இலக்கை அடைய வேண்டுமானால் நாட்டில் உள்ள வறுமையும், எழுத்தறிவின்மையும் ஒழிக்கப்பட வேண்டும். இந்த இரண்டும் தான் நமக்கு பெரிய சவாலாக உள்ளது. வறுமை ஒழிக்கப்பட்டால்தான் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3 -வது இடத்ைத பிடிக்க முடியும்.

மாணவர்கள் துரித உணவுகளை தவிர்த்து நமதுநாட்டின் பாரம்பரிய உணவுகளை சாப்பிடவேண்டும். யோகா, உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். இந்தியாவின் 54 கலைகளில் யோகாவும் ஒன்று. இந்தியாவின் யோகா கலை இன்று 117 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இளைஞர்கள் முழு உடல் தகுதியுடன் இருந்தால் தான் எதிர்கால இந்தியாவும் முழு வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி முதல்வர் சுந்தரராமன் வரவேற்று பேசினார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விழாவில் கலந்து கொண்டார். முடிவில் கல்லூரி இயக்குனர் அன்பரசு நன்றி கூறினார்.

விழா முடிந்ததும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மேடையை விட்டு இறங்கி கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்றார். அப்போது மாணவ-மாணவிகள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து வெங்கையா நாயுடு சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்கினார்.

முன்னதாக நேற்று மதியம் நாக்பூரில் இருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் மூலம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். 11.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்