துறையூர் அருகே, மது குடித்த 2 பேர் சுருண்டு விழுந்து சாவு - மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
துறையூர் அருகே மது குடித்த 2 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முசிறி,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் இருந்து கரட்டாம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் 2 டாஸ்மாக் கடைகள் அருகருகே அமைந்துள்ளன. 2 கடைகளுக்கும் சேர்த்து ஒரு பார் மட்டும் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைகள் வழக்கமாக மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும். இங்கு, அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் மது அருந்துவது உண்டு. ஆனால், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாக காலை நேரங்களிலும், இரவு 10 மணிக்கு கடை மூடப்பட்ட பிறகும் சிலர் வெளியிடங்களில் திருட்டுத்தனமாக விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.
துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 30), தாமோதரன் (55), சதீஷ்குமார் (30). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக நேற்று காலை 9 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பெட்டிக் கடை முன்பு நின்று இருந்தனர். அப்போது, தாமோதரன் வீட்டில் இருந்து ஒரு மதுபாட்டில் கொண்டு வந்தார். அந்த மதுவை 3 பேரும் குடித்தனர்.
பின்னர் சதீஷ்குமார் கூலி வேலைக்கு பஸ்சில் ஏறி துறையூர் சென்று விட்டார். சரவணன் மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் தள்ளாடியபடி திடீரென்று ரோட்டில் சுருண்டு விழுந்தனர். அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் சரவணன் துடிதுடித்து இறந்தார். அருகில் இருந்தவர்கள் தாமோதரனை மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
மேலும், பஸ்சில் சென்று கொண்டிருந்த சதீஷ்குமாருக்கும் திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர், துறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் தாமோதரன், சரவணன் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமோதரன் கொண்டுவந்த மதுவில் விஷம் ஏதேனும் கலக்கப்பட்டு இருந்ததா? அல்லது அதிக போதைக்காக குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக அதில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டதா?, மேலும் தாமோதரன் எங்கு மதுபாட்டில் வாங்கினார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.