இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் - வடக்குமாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் பேட்டி

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கினால்தான் நன்மை கிடைக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறினார்.

Update: 2020-01-10 22:45 GMT
வேலூர், 

வேலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி சார்பில் நேற்று தமிழர்திருநாள் மற்றும் திருவள்ளுவர் விழா நடந்தது. விழாவில் ஊரீசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் தியோடர் ராஜ்குமார் வரவேற்றார். முதல்வர் நெல்சன் விமலநாதன் முன்னிலை வகித்தார். பேராயர் எச்.சர்மா நித்யானந்தம் தொடக்கவுரையாற்றினார்.

விழாவில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். வி.ஐ.டி. வேந்தரும், வேலூர் தமிழ்ச்சங்க நிறுவனருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

உலகில் உள்ள மொழிகளில் மூத்தமொழிகள் 7. அதில் தமிழ்மொழியும் ஒன்று. எழுத்து, ஒலி மாறாத மொழி தமிழ்மொழிதான். இலங்கையில் 30 லட்சம் தமிழர்கள் இருந்தார்கள். தற்போது அது 2 மடங்காக குறைந்துள்ளது. நாம் எப்போதும் இலங்கை தமிழர்களுடன் இருப்போம்.

தமிழை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை. பெயர்கள் எல்லாம் வடமொழியாகிவிட்டது. பேசுவதிலும் ஆங்கிலம் கலந்துவிட்டது. தமிழை வாழவைக்கவேண்டும். அதற்கு தமிழில் பெயர்வைக்க வேண்டும். அனைத்து மக்களும், நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் ஒரேநூல் திருக்குறள் மட்டும்தான். திருக்குறளை அனைவரும் படிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் விக்னேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

30 வருடங்களாக இங்கே இருக்கும் இலங்கை தமிழ் மக்கள் பல விதமான சலுகைகளை பெற்றிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அதில் சட்ட சிக்கல்கள் சில இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சட்ட சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும். அப்போதுதான் நன்மை கிடைக்கும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரட்டை குடியுரிமை சம்மந்தமாக ஒரு உடன்பாடு இல்லாத காரணத்தினால் சில பிரச்சினைகள் இருக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்கள் அந்த கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களா? என்று எனக்கு தெரியவில்லை. அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அவர்களை விடுவிக்காமல் இருப்பதற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்குமா என எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்

ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தமிழியக்க பொதுச்செயலாளர் அப்துல்காதர், திராவிட இயக்க தமிழர் பேரவை துணைபொதுசெயலாளர் சிங்கராயர், உலக தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் சிவசுப்பிரமணியம், அகர முதல இலக்கிய மன்ற தலைவர் சோலைநாதன், வேலூர் மாவட்ட தமிழ்ச்சங்க பேரவை தலைவர் ரத்தினநடராசன், தமிழியக்க பொருளாளர் சோதி மற்றும் சவுகத்அலி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் இன்ப எழிலன் நன்றி கூறினார். வேலூர் தமிழ்ச்சங்க செயலாளர் சுகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்