சேலம் ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து மீட்கப்பட்ட, பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை - கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு

சேலம் ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து மீட்கப்பட்ட பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2020-01-09 22:30 GMT
கும்பகோணம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த இலுப்பை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது47). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது வீட்டில் ஐம்பொன்னால் ஆன சாமி சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 1¾ அடி உயரம், 6½ கிலோ எடைகொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை ராஜசேகரன் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராஜசேகரனிடம் இருந்து சிலையை மீட்டனர்.

விசாரணையில் அந்த அம்மன் சிலை சோழர் காலத்து சிலை என்பதும், 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. மேலும் ராஜசேகரன் அந்த சிலையை வெளிநாட்டில் விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த சிலையை, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அம்மன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் நீதிபதி மாதவ ராமானுஜம் முன்பு ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிலை நாகேஸ்வரன் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்