வரி ஏய்ப்பு வழக்கு உள்ளதால் டி.கே.சிவக்குமாருக்கு, மாநில தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் தயக்கம்

வரி ஏய்ப்பு வழக்கு உள்ளதால் டி.கே.சிவக்குமாருக்கு மாநில தலைவர் பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுகிறது.;

Update: 2020-01-09 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர் டி.கே.சிவக்குமார். சித்தராமையா ஆட்சியில் மின்சாரத்துறையையும், குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறையையும் நிர்வகித்தார். மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது, குஜராத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அருகே ரெசார்ட்டில் தங்க வைத்து பா.ஜனதாவுக்கு தாவாமல் பார்த்துக் கொண்டார். இதனால் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் எண்ணம் ஈடேறவில்லை.

இதனால் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் கோபத்திற்கு டி.கே.சிவக்குமார் ஆளானார். இந்த சூழ்நிலையில் டி.கே.சிவக்குமாரின் வீடு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் இருந்து ரூ.8.59 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்து, டி.கே.சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 48 நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தினேஷ் குண்டுராவ் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக உள்ளது.

அந்த பதவியை தனக்கு வழங்குமாறு டி.கே.சிவக்குமார் கேட்டு வருகிறார். காங்கிரஸ் மேலிடமும் அவருக்கு பதவி வழங்க முடிவு செய்திருந்தது. ஆனால் அவரை மாநில தலைவராக நியமிக்க முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ச்

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக டி.கே.சிவக்குமார் டெல்லி சென்றுள்ளார். அங்கு கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலை டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசினார். அப்போது கே.சி.வேணுகோபால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அது முடிவடையும் வரை வேறு பதவியை, அதாவது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி அல்லது காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் பதவி ஆகியவற்றில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு டி.கே.சிவக்குமார், ‘‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. நான் கட்சி மாறி இருந்தால் இந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டிருப்பேன். ஆனால் கட்சி மாறாததால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறேன். எனக்கு கட்சி மாநில தலைவர் பதவி அல்லது எதிர்க்கட்சி தலைவர் பதவி ஆகிய இரண்டில் ஒன்றை வழங்க வேண்டும்’’ என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்க தயங்கும் காங்கிரஸ் மேலிடத்தின் நடவடிக்கையால் அதிருப்தியை தெரிவித்துவிட்டு டி.கே.சிவக்குமார் பெங்களூரு வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்