பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம்: ரே‌‌ஷன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகிக்கப்படுவதையொட்டி ரே‌‌ஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.;

Update: 2020-01-09 22:15 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்புத்துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கமேட்டில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஜனவரி 9-ந்தேதி முதல் வருகிற 12-ந்தேதி வரையிலும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந்தேதி அன்றும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி கரூர் அனுமந்தராயன்கோவில் தெரு, வடக்குபிரதட்சணம் ரோடு, பசுபதிபாளையம், ராமாகவுண்டனூர், திருமாநிலையூர் உள்பட நகர்புற பகுதிகள் மற்றும் கிரு‌‌ஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கடவூர், க.பரமத்தி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு நேற்று வினியோகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை 8 மணி முதலே ரே‌‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் குடும்ப அட்டையுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பின்னர் கடை திறக்கப்பட்டதும், முதலில் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதையொட்டி அனைத்து ரே‌‌ஷன் கடைகளிலும் கரும்பு கட்டுகள், பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பிற்காக ரூ.29 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 95 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்